Free Web Hit Counters
எல்லா நதிகளும் கடலை நோக்கி.... எல்லா மனித நேயப் பயணங்களும் காரல் மார்க்ஸை நோக்கி.....!
"புத்தம் புது பூமி! வேண்டும் நித்தம் ஒரு வானம் வேண்டும்....." -கவிப்பேரரசு வைரமுத்து.....







"அரசியல் கோமாளிகளின் நையாண்டி நக்கல் காமெடி கலாட்டா!"

Friday, May 23, 2008

இடிக்கப்பட்டது சுவர் மட்டுமா...?

மலையடிவார அட்டூழியங்கள்......



கடந்த 15 ஆண்டுகளாக காட்டெருமை, கரடி, ஓநாய் போன்ற மிருகங்களிடமிருந்து தங்களது விவசாயத்தை பாதுகாத்து வந்த தாழையூத்து மலையடிவாரத்து தலித்துகள் இப்போது அவற்றை விட கொடிய மிருகங்களால் பெரும் சேதத்தை சந்தித்துள்ளனர். தீண்டாமைச் சுவர் இடிக்கப்படுவதை ஏற்க முடியாமல் ‘ஐயோ எங்களது பிறப்புரிமை போகிறதே’ என்று கதறிக்கொண்டு, ரேசன்கார்டுகளை தூக்கியெறிந்துவிட்டு மே 5ம் தேதி தாழையூத்து மலையடிவாரத்துக்குப் போனார்கள் Modarates (கிருஷ்ணசாமி உபயமளித்த திருநாமம்).

அங்கு 15 ஆண்டுகளுக்கு மேலாக காட்டுப்பகுதிகளை சீர்படுத்தி விவசாய நிலமாக்கி நெல், கம்பு, சோளம், ஆமணக்கு, மல்லிகை பயிர்களை வளர்த்து வைத்திருந்தனர் ஐந்து தலித்துகள். திடீரென பெருங்கூட்டம் தங்களது விளைநிலங்களை நோக்கி வருவது கண்டு அலறியடித்துக் கொண்டு உயிரைக் காப்பாற்ற ஊருக்குள் ஓடி வந்து விட்டனர். ஓடி வந்தவர்கள் ஊரில் இருந்த பதற்றமான நிலையறிந்து இதைச் சொன்னால் பிரச்சனை பெரிதாகிவிடுமோ என்று யாரிடமும் சொல்லாமல் பயந்து இருந்துவிட்டனர்.

இந்நிலையில் மே 7ம் தேதி தோழர் பிரகாஷ் காரத் உத்தப்புரம் மக்களிடம் உரையாற்றினார். அந்நிகழ்ச்சிக்கு வந்திருந்த தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் ச.தமிழ்ச்செல்வன், மக்களிடம் பேசிக் கொண்டிருந்தபொழுது "இப்ப பயந்து மலைக்கு ஓடிட்டதா சொல்றாங்களே" என்று கேட்டிருக்கிறார். அதற்கு ஒருவர் "அவெங்க எங்க ஓடுனாங்கெ, அங்கேயும் போயி எங்க ஆளுகள அடிச்சு விரட்டீட்டு எங்க தோட்டத்துல இருந்துகிட்டு எங்களுக்கு எதிரா பேட்டி கொடுக்கிறாங்கே" என்று கூறியுள்ளார்.

உத்தப்புரம் போய் வந்த அன்று மாலை தோழர் தமிழ்ச்செல்வன் என்னிடம் இந்த விஷயத்தைக் கூறினார். "இதென்ன புதிய செய்தியாக இருக்கிறது" என்று உத்தப்புரம் தோழர்களிடம் விசாரிக்கச் சொன்னேன். 3 நாள் பயந்து இருந்தவர்கள் தாங்கள் விரட்டப்பட்ட செய்தியும், ஆடு, மாடு, கோழி என எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஓடிவந்த விபரத்தையும் உயிரற்ற குரலிலே சொன்னார்கள். உடனடியாக காவல் நிலையத்திலும், வட்டாட்சியரிடமும் புகார் செய்தோம். மொத்த அரசு நிர்வாகமும் மலையடிவாரவாசிகளிடம் கெஞ்சி கூத்தாடிக் கொண்டிருந்தபோது நிலத்தை மீட்டுத் தரும் முயற்சியையா செய்யப் போகிறார்கள். எதுவும் நடக்கவில்லை. இரண்டு நாள் கழித்து முதல்வருக்கு பாதிக்கப்பட்டவர்கள் தந்தி அனுப்பினார்கள். தந்தி அலுவலகத்தில் கொடுத்த ரசீது மட்டும்தான் மிச்சம்.

இந்நிலையில் மலையடிவாரவாசிகள் ஊர் திரும்பியவுடன் நிலத்துக்குச் சொந்தக்காரர்களான தலித்துகள் மொட்டையாண்டி, வாசி, பால்ராஜ், நாகராஜ், ராசு ஆகிய ஐவரும் தங்கள் நிலத்துக்குப் போயினர். அங்கே நடந்திருந்த அட்டூழியங்களைப் பார்த்து பதறியடித்துக் கொண்டு ஓடிவந்து விஷயத்தைச் சொன்னார்கள். நாங்கள் மே 14ம் தேதி மதியம் 3 மணிக்கு தாழையூத்து மலையடிவாரத்திற்கு நேரில் சென்றோம்.

தலித் மக்கள் கரடு முரடான மலையடிவாரத்தில் ஊத்துத் தண்ணீரை மட்டுமே நம்பி சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கி வைத்திருந்த வெள்ளாமை முழுவதும் சூறையாடப்பட்டிருந்தது. செழிப்பான விவசாய பூமியில் பயிர்களுக்கு அடியில் 500 பேருக்கு 7 நாட்களுக்கான சமையல் நடத்தப்பட்டுள்ளது. கொள்ளிக்கட்டையை பச்சைப்பயிர்களின் வேர்களுக்கு அடியில் வைத்த குரூர மணம் படைத்தவர்கள் அந்த இடங்களை உண்டு இல்லை என ஆக்கிவிட்டு திரும்பியுள்ளனர்.

மொட்டையாண்டி என்பவரது வீடு முழுவதும் அடித்து நொறுக்கப்பட்டுவிட்டது. வீட்டின் மேற்கூரையாக போடப்பட்டிருந்த தகரங்கள் எதுவும் இல்லை. 15 ஆடுகளும், 2 மாடுகளும் காணவில்லை. சுமார் நாலரை ஏக்கர் பட்டா நிலத்தில் நெல்லும், மல்லிகைப்பூவும் பயிர் செய்துள்ளார். ஆனால் இப்போது எஞ்சிய பயிர் எதுவும் இல்லை என்று சொல்லலாம்.

வாசியின் வீடும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. வீட்டில் இருந்த மண்பாணைகள் வெளியெங்கும் சிதறிக் கிடக்கின்றன. சுமார் அரை மூட்டை அரிசி மண்ணோடு மண்ணாக கொட்டிக் கிடந்தது. 6 வேப்பமரங்களும் இரண்டு புளியமரமும் வெட்டியெடுக்கப்பட்டுள்ளது. கோழி, நாய்கள் எதுவும் இல்லை. சோளம், ஆமணக்கு, தட்டாம்பயிறு ஆகிய விவசாயங்கள் முழுவதும் மண்ணோடு மண்ணாக்கப்பட்டுள்ளது. பால்ராஜின் தோட்டம் பரிதாபமாக உள்ளது. நான்கு ஏக்கருக்கு நடப்பட்டிருந்த எலவம் பஞ்சு மரங்கள் பலவும் வெட்டிப் போடப்பட்டுள்ளது. தண்ணீர் பாய்ச்சுவதற்காக பதிக்கப்பட்டுள்ள பைப்புகள் முழுவதும் அடித்து நொறுக்கப்பட்டுவிட்டது. முருங்கை மரங்களும், கேந்திப்பூவும் பெரும்பகுதி அழிக்கப்பட்டுவிட்டது.

நாகராஜின் தோட்டம் மிகக் கடுமையான அழிவுக்கு உள்ளாகியுள்ளது. இங்குதான் தங்கியிருந்த 500 பேர்களுக்கும் தினமும் சமையல் நடந்துள்ளது. விவசாயத்திற்கு நடுவில் 6 நாட்களாக அண்டா அண்டாவாக அடுப்பெரித்தால் பயிரும், நிலமும் என்னவாகும்? அந்தக் கொடுமை அவரது தோட்டத்தில் நடந்துள்ளது. அந்தப் பகுதி முழுவதும் விவசாயம் நாசம் செய்யப்பட்டுள்ளது. அவரது வீடும், உள்ளே இருந்த பொருட்களும் அடித்து நொறுக்கப்பட்டுவிட்டது. கேந்திப்பூச் செடிகளும், அகத்தியும், ஆமணக்கும் நாசமாக்கப்பட்டுவிட்டது.

ராசுவின் தோட்டத்திலும் இதே கதிதான். பெரும் பெரும் மரங்கள் வெட்டியெடுத்துச் செல்லப்பட்டுவிட்டது. சீனி அவரை, முருங்கை, செவ்வந்திப்பூ போன்ற பயிர்கள் முழுவதும் அழிக்கப்பட்டுவிட்டது. மரங்களை கட்டுக்கட்டாக வெட்டிக் கொண்டுபோயிருக்கிறார்கள். காட்டு மிருகங்களிடம் இருந்து தங்களைக் காக்க பெரிதும் பயன்பயன்பட்ட 12 நாய்களை அடித்தே கொன்றிருக்கிறார்கள். கோழி, ஆடுகளை எல்லாம் சாப்பிட்டுத் தீர்த்திருக்கிறார்கள். பயிர்களை எல்லாம் அழித்து நசுக்கியிருக்கிறார்கள். அனைத்தையும் இழந்த 5 தலித் குடும்பங்கள் அனாதையாக நிற்கிறது. பாதுகாப்பில்லை...பாதுகாப்பில்லை... என்று கத்திக்கொண்டே மலையேறிய Modarates அடுத்தவன் சொத்தை அழித்துத் தின்ற கொடுமை இது.

வெட்டப்பட்ட மரங்களை கட்டிப் பிடித்துக்கொண்டு “பச்சப்புள்ள மாதிரி வளத்தேனே...” என்று பிச்சையம்மாள் கதறியழுததும், “குலைக்க நாயில்லையே சாமீ...” என்று வெள்ளையம்மாள் தலையிலே அடித்துக் கொண்டு கதறியதும் நம் நெஞ்சை உலுக்கியது. அவர்களின் இந்தக் கதறல் தமிழகத்தின் ஆட்சியாளர்களின் காதுகளில் கேட்குமா?

சுவர் இடிப்பை ஏற்க மாட்டோம் என மலையடிவாரம் சென்றவர்களிடம் மாவட்ட ஆட்சியரும் அதிகாரிகளும் தினமும் போய் பேச்சுவார்த்தை நடத்தினர். வரிசை வரிசையாக நாற்காலி போட்டு அமர்ந்து மணிக்கணக்கில் பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகளும் ஒரு வகையில் இந்த அழித்தொழிப்பில் பங்கெடுத்தவர்கள்தான். அளவுதான் கூடக் குறைய இருக்கும். மொட்டையாண்டியின் வயல்வெளி எங்கும் ஏறி நசுக்கியிருக்கிற எத்தனையோ வண்டிச்சக்கரங்களின் தடங்களில் தமிழ்நாடு அரசு வாகனத்தின் டயர் தடம் மட்டும் தனியாகவா தெரியப் போகிறது?


_சு.வெங்கடேசன்



(சுவர் இடிக்கப்பட்ட பிறகு தலித்துகளின் முகத்திலா விழிப்பது என்று வீட்டைப் பூட்டி வெளியேறி வனவாசம் கிளம்பிய உத்தப்புரம் சாதிவெறியர்கள் வந்து ஆக்ரமித்த தோப்புகளும் தோட்டங்களும் தலித்துகளுடையது....)



(சாதிக்கொழுப்பால் மெழுகிக் கட்டிய தங்கள் சுவரை இடித்துவிட்டார்களே என்ற கவலையில் அன்னம் தண்ணி ஆகாரமில்லாமல் காய்ந்து தீய்ந்து கருவாடாய்க் கிடக்கவில்லை பிள்ளைமார்கள். தலித்துகளின் மூத்திரத்தில் வளர்ந்திருந்த வேப்பந்தோப்பின் நிழலில் அண்டா அண்டாவாக ஆக்கி அவித்து தின்று கொழுத்தார்கள் என்பதற்கு வேறென்ன சாட்சி வேண்டும்?)





(அகிம்சா வழியில் உத்தப்புரம் பிள்ளைமார் போராடிக்கொண்டிருப்பதாக புளுகிக் கொண்டிருந்தன ஊடகங்கள். அவர்களது அகிம்சையின் உக்கிரத்தில் தகர்த்து வீழ்த்தப்பட்ட தலித் மொக்கையாண்டி- லட்சுமி குடும்பத்தின் வாழ்விடமாம் குடிசை.)


இருபதுஅடி சுவற்றை இடித்ததற்காக இன்னும் எதையெல்லாம் இடிக்கக் காத்திருக்கிறார்களோ...? குடிசையை இழந்த சோகத்தில் வெடித்தழும் லட்சுமி ....




அழும்புகளைப் பார்வையிடும் மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர்கள்....













(உண்ட வீட்டுக்கு ரண்டகம். தலித்துகளின் தோப்பில் தங்கியிருந்த உத்தப்புரம் சாதிவெறியர்கள் அங்கிருந்த நிழல்தர மரங்களை வெட்டியெடுத்துப் போயுள்ளனர்.. இந்த மரத்திருடர்களுக்கு என்ன தண்டனை?)




(மலையடிவாரத்திலிருந்த தலித் வெள்ளையம்மாள் வீட்டையும் சூறையாடியிருக்கிறார்கள் பிள்ளைமார். எதையெல்லாம் அள்ளிக்கொண்டு போயிருக்கிறார்கள் என்பது இனிதான் தெரியும்.)



தலித்துகளின் கழிவுகளைத் தின்று வளர்ந்திருந்த நாட்டுக்கோழிகள் 150 ம் இப்போது பிள்ளைமார் வயிற்றில். றெக்கைகளை தின்ன முடியாதென்பதால் விட்டுப் போயிருக்கின்றனர்.






தலித் நாகராஜ் தோட்டத்தில் அடித்து உடைக்கப்பட்ட பாசன பைப்.


(குடும்ப அட்டையை திருப்பித் தந்துவிட்டதற்காக குடிமக்கள் இல்லை என்றாகிவிடுமா? மலையடிவாரம் முழுக்க இறைந்து கிடக்கும் டாஸ்மார்க் பாட்டில்கள்.)




சேதப்படுத்தப்பட்ட சாமந்தித் தோட்டம்




சோளநாத்தும் தப்பவில்லை.



நாகராஜ் வீட்டையும் சூறையாடிப் போயுள்ளனர். அவர்கள் எடுத்துக் கொண்டு ஓடியதுபோக எஞ்சியப் பொருட்கள் இறைந்து கிடக்கின்றன.

படங்கள்: சு.வெங்டேசன்

அடிக்குறிப்புகள்: ஆதவன் தீட்சண்யா
e-mail: visaiaadhavan@yahoo.co.in

thanks...

pls click

www.keetru.com

2 comments:

Unknown said...

என்ன செய்யலாம் சொல்லுங்க....

ஏகலைவன் said...
This comment has been removed by a blog administrator.